India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – விமர்சனம்

இரா. ரவிஷங்கர்

சுத்தியிருக்கும் 18 கிராமங்களில் பெரிய கட்டு தூக்குத்துரைக்கு ஊரே விஸ்வாசமா இருக்க, தூக்குத்துரையோ தன்னிடம் கோபப்பட்டு பிரிந்து சென்ற மனைவி நிரஞ்சனா, அப்புறம் மகஸ் ஸ்வேதா மீது விஸ்வாசமாக இருக்கிறார்.

இப்படியொரு ஒன் – லைன்னை சொல்லும்போதுதான் ‘விஸ்வாசம்’ என்ற டைட்டிலுக்கு ஒரு அர்த்தமிருக்கும்.

அஜீத் – சிவா கூட்டணியில் நான்காவது படம். ஆனால் கதையின் படி பார்த்தால் வீரம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன்.

வீரத்தில் தான் விரும்பும் பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாவலனாக இருப்பார். இதில் சொந்த மகளுக்கு பாதுகாவலனாக இருக்கிறார். அதே வேஷ்டி சட்டை. தம்பிகளுக்குப் பதிலாக..இதில் மாமன் மச்சான். ஆனால் சிவா திரைக்கதையில் அப்பா- மகள் சென்டிமெண்ட்டை சரியான மிக்ஸிங்கில் கலந்து, ஆக்ஷனையும் குழைத்து இருப்பதால் ’விஸ்வாசம்’, அஜீத் ரசிகர்களை ஆஸ்வாசம் படுத்தும் என முயற்சித்திருக்கிறார்கள். அந்த முயற்சி நல்ல பலனை அளித்திருக்கிறது.

’மதிப்பு மரியாதைங்குறது தானா வரணும்னு’ தம்பி ராமையா பஞ்ச் கொடுத்து அஜீத்தின் ஓபனிங்கை தொடங்கி வைக்கிறார். அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்க, தனது சால்ட் அண்ட் பெப்பர் முடிக்கு ஒரு ஒரு மணி நேரம் ப்ரேக் கொடுக்கிறார் அஜீத்.

அந்த ஒரு மணிநேரமும் அட்டகாசம்…அமர்க்களம்.. கூடவே நயன்தாரா.

’’உங்களக் கட்டிப்பிடிக்கணும்னு தோணும்போது உங்களுக்கு கைக்கொடுப்பேன்.’ என நயன்தாரா சொல்லும், செய்யும் காட்சிகள் ’லவ் டச்’.

அஜீத்தை கருப்பு நிற தலைமுடி, தாடியில் பார்ப்பது ரசிகர்களுக்கான விருந்துதான். ஆனால் இளமைத்தோற்ற அஜீத்தை வைத்துகொண்டு ரோபோ சங்கர், தம்பி ராமையா இருவர் கூட்டணி, காமெடிக்கு முயற்சித்திருக்கிறார்கள். கூடவே யோகி பாபுவும். ஆனால் காமெடி சரியாக சிங்க் ஆகவில்லை. காமெடி என்ற பெயரில் டிராமா தனமான பழைய காட்சிகளைத் தூசித்தட்டி எடுத்திருப்பது செயற்கையாக இருக்கிறது.  இதையும்  தாண்டி நம்மை சரிக்கட்டி சமாதானப்படுத்துவது நயன்தாரா.

இடைவேளை வரை,  நம்மை அக்கடா என ஆசுவாசப்படுத்தும் சிவா, அடுத்து எமோஷனல் சென்டிமெண்ட்டை கையிலெடுக்க, வேகமெடுக்கிறது.

கோயில் விழாவுக்காக மனைவியை அழைக்க வரும் அஜீத் அண்ட் கோ, மகளின் உயிருக்கு பிரச்னை என்றதும் காவலனாக அவதாரம் எடுக்கிறார். இங்கே ரிலாக்ஸூக்கு விவேக் எண்ட்ரீ. விவேக்கின் சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், எல்லா படங்களிலும் ஸ்பீடா மீட்டரை முழுங்கியது போல் வேகவேகமாக பேசுவதை தவிர்த்தால் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும்.

அஜீத் – நயன்தாராவின் மகளாக அனிகா. நன்றாக நடிக்கிறார். எதற்கும் இப்போதே 2022- ம் ஆண்டு வாக்கில் இவரது கால்ஷீட்டை வாங்கி வைத்து கொள்வது தயாரிப்பாளர்களுக்கு நல்லது. தமிழ்சினிமாவுக்கு புதிய ஹீரோயினாக இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் இவர் அவதாரமெடுப்பார் என தமிழ்சினிமாவின் இலக்கணம் சொல்கிறது.

வில்லன் ஜெகபதிபாபு. அவர் அவ்வளவு சிரீயஸாக அஜீத்தின் மகளை பழிவாங்க துடிப்பதற்கு ஏற்ற சரியான, வலுவான காரணம் இல்லை. தன் மகள் எதிலும் முதலாவதாக வரவேண்டுமென எதிர்பார்க்கிறார். அதில் தவறு இல்லை. ஆனால் புத்திசாலியான ஒரு பிஸினெஸ்மேன்…ஸ்போர்ட்ஸ்மேன் எப்படி தன் மகளின் மோசமான நிலைக்கு அஜீத் – நயன்தாரா மகள்தான் காரணமென சட்டென்று முடிவுக்கு வருகிறார் என்பதில் லாஜிக் இல்லை. வழக்கமாக கமர்ஷியல் படங்களில் லாஜிக்குகளை விட மேஜிக்குகள்தான் அதிகம் சுவாரஸ்யத்தைக் கிளப்பும். ஆனால் இங்கே ஒட்டுமொத்த படத்திற்கும் அடித்தளமாக இருப்பதே அந்த முடிச்சுதான். அதை கண்டுக்காம விட்டுடீங்களே பாஸ்.

தன் மகளுடன் சேர்ந்த பிறகு ‘அடிச்சுத் தூக்கு’ என மாஸ் காட்டியிருக்கிறார் அஜீத். ‘ஓட்டப்பந்தயத்துல நான் ஜெயிக்க காரணம் என் அப்பாதான்’ என்று அனிகா சொல்லும்போது சந்தோஷமாகும் அஜீத், அடுத்த விநாடியே, ’’உனக்கு யாரைப் பிடிக்காதோ அவங்கள நினைச்சுகிட்டு ஓடு. பூமி உன்னை உந்தி தள்ளும்’ என்று கோச் சொன்னதாக சொல்லும் காட்சியில் கண்கலங்கும் அஜீத். காரை விட்டு இறன்கி மழையில் நனைந்தபடி அழுவது எமோஷனல் டச்.

க்ளைமாக்ஸில் அஜீத் – நயன்தாரா வெற்றிப் பெற்றதும் எல்.இ.டி திரையில் ஸ்வேதா தூக்குத்துரை என்று வருவதும், அருகில் இருக்கும் அஜீத்தின் கையை நயன்தாரா பற்றுவதும் டைரக்டர் டச்.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் கேமரா, படத்தின் வெற்றிக்கு கைக்கொடுத்திருக்கிறது. இவ்வளவு கூட்டத்தை வைத்து கொண்டு படமெடுப்பது என்பது பரிசு அல்ல பனிஷ்மெண்ட்,

இமானின் இசை மானைப் போல பின்னணியில் வேகமாய் இருக்கிறது. `கண்ணான கண்ணே’ பாடலில் தென்றலாய் இசைக்கிறது. நீண்ட நாட்களுக்கு என்பதை விட நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜீத்திற்கு ஒரு விவேகமான குத்துப்பாட்டு. தியேட்டரில் விசில் சத்தம் ஹைபிட்ச்சில் அதிர வைக்கிறது. பதினோறு ஆபரேஷனுக்கு பிறகும் ஒருத்தரால் இப்படி ஆட முடியுமா ஒரு விநாடி நீங்கள் யோசித்தால் போதும். உங்களுக்கு இருக்கிற வலியெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும்.

எடிட்டிங்கில் ரூபன் கச்சிதம்.

’என் வாழ்க்கையில நான் வில்லன்டா’ என மீசையை ஆஜீத் முறுக்கும் போது ரசிகர்களின் கெத்து முறுக்கேறுகிறது. படத்தில் வசனத்திற்காக அதிகம் மெனக்கெட்டு இருக்கிறார்கள். ‘வாழ்க்கையில ஒரு தடவ கூட ஆழாத பணக்காரனும் இல்ல. வாழ்க்கையில இரு தடவ கூட சிரிக்காத ஏழையும் இல்ல.’ என்ற வசனத்தைப் போல் ஆங்காங்கே எக்ஸ்ட்ராவாக தெறிக்கிறது.

ஊரே கொண்டாடும் தூக்குத்துரை என்பதாலோ என்னவோ.. தியேட்டருக்குள் இருக்கும் கூட்டத்தைவிட, ஒவ்வொரு காட்சியிலும் திரையில் இருக்கும் கூட்டம் அதிகமிருக்கிறது.. ஃப்ரேம் முழுக்க அவ்வளவு மாஸ் காண்பித்திருக்கிறார் சிவா.

காதல், மோதல், மகள் என ஆக்‌ஷன் சென்டிமெண்ட்டுடன் நகரும் கதையின் இறுதியில், ‘’குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டால் அது தற்கொலை அல்ல. கொலை.  குழந்தைகள் மீது உங்க ஆசையைத் திணிக்காதீர்கள்’ என்று ஒரு சீரியஸான சமூக கருத்தோடு சுபம் என்கிறார்கள்.

விஸ்வாசம் – ரசிகர்களுக்கான தூக்குத்துரை!