India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

சூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்

  • இரா. ரவிஷங்கர்

தமிழ் சினிமாவில் அதிர்வை உண்டாக்கிய சில படங்களில் ஒன்றான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா எட்டு ஆண்டுகளுக்குப் பின் இயக்கி வெளிவந்திருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

இது வழக்கமான தமிழ்ப்படம் அல்ல. கதையிலும் சரி..திரைக்கதையிலும் சரி…வசனத்திலும் சரி… மேக்கிங்கிலும் சரி…

திருமணமான பிறகு தனது நண்பனை வீட்டிற்கு வரவழைத்து ’அந்த’ மாதிரி கொள்ளும் சமந்தா, ’அந்த’ திடீர் உற்சாகத்தினால் மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தாவின் நண்பர் கட்டிலிலேயே உயிரை விடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான  ஆட்டம் க்ளோஸ் ஆகும் போது  வீட்டிற்கு வருகிறார் கணவர் பஹத் ஃபாஸில். அடுத்து என்ன?

5 விடலைப் பையன்கள். வயதுக்கே உரிய உத்வேகத்தினால் ‘அந்த’ மாதிரி படம் பார்க்க திட்டமிடுகிறார்கள். யாருமில்லாத நண்பன் வீட்டில் திருட்டுத்தனமாக படம் பார்க்க கூடுகிறார்கள். ‘அந்த’  படம் தொடங்க,  அதில் ஒரு விடலைப் பையனின் அம்மாவான ரம்யா  கிருஷணன் நடித்திருப்பது தெரிய வருகிறது. கோபத்தில் ரம்யா கிருஷ்ணனின் மகன் டிவியை உடைத்துவிட்டு அம்மாவைக் கொல்ல ஸ்க்ரூ டிரைவருடன் கிளம்புகிறான். அடுத்து என்ன?

ரம்யா கிருஷ்ணனின் மகன்  கோபத்தில்  அப்படியே கிளம்பியிருந்தாலும் பரவாயில்லை. போவதற்கு முன் ‘அந்த’ படம் பார்த்த டிவியை உடைத்துவிட்டு போகிறான். இதனால் வீட்டுக்கு வரவழைத்த பையன், தன் அப்பா வருவதற்குள் வேறு டிவியை வைத்தே ஆகவேண்டுமென சொல்கிறான். இதனால் டிவி வாங்குவதற்கு 3 நண்பர்களும் கிளம்புகிறார்கள். அடுத்து என்ன? 

வீட்டைவிட்டு, மனைவி, மகனை விட்டு ஓடிப்போன விஜய் சேதுபதி மீண்டும் தனது குடும்பத்தைப் பார்க்க வருகிறார். அப்பாவைக் காணும் ஆசையோடு இருக்கும் மகன்,  மீண்டும் உற்சாகமாக தன்னை அழகுப்படுத்திப் பார்த்து வெட்கப்படும் மனைவி உட்பட ஒட்டுமொத்த உறவுகளும் காத்திருக்க, திருநங்கை ஷில்பாவாக வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்து என்ன?

ரம்யா கிருஷ்ணனின் கணவர் மிஷ்கின். சுனாமியில் சிக்கினாலும் உயிர் பிழைத்த அற்புதமாக இறைவனுக்கு ஊழியம் செய்கிறார். தனது ஜெபத்தினால் எல்லோரையும் காப்பாற்ற முடியுமென நினைக்கும் மிஷ்கினுக்கு, அவரது மகனைக் ஜெபத்தினால் காப்பாற்ற முடியாமல் போகிறது. அடுத்து என்ன?

இந்த 5 களங்களையும் செங்கல் போன்று ஒவ்வொன்றாய் வரிசையில் அடுக்கியிருக்கிறார் இயக்குநர். ஒரு வரிசை முடிந்ததும் அதற்கு மேல் அதே 1..2..3…4..5… என அடுக்குகிறார். இப்படி திரைக்கதை வரிசையில் பயணித்தாலும், சூப்பர் டீலக்ஸ் ஒரு நான் – லீனியர் பாணியில் கவனத்தைக் கவர்கிறது.

Mise-en-scène  பாணியில் சூப்பர் டீலக்ஸை கொடுத்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. படம் முழுக்க நீலம், ஆரஞ்சு வண்ணங்கள் திரையை ஆக்ரமித்திருக்கின்றன.

படத்தில் குறிப்பிடும்படியான அம்சம். சமந்தா, பஹத் ஃபாஸில், ரம்யா கிருஷ்ணன், ராசுக்குட்டியாக வரும் குட்டிப்பையன் அஸ்வந்த், மிஷ்கின், சில காட்சிகளே வந்தாலும் கவரும் காயத்ரி, டிவிக்காக திருடும் அந்த மூன்று விடலைப்பையன்கள், இன்ஸ்பெக்டராக வரும் பக்ஸ் என அனைவருமே இயல்பாக, கதாபாத்திரமாக அசத்தியிருக்கிறார்கள். வழக்கமாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், மெனகெடும் விஜய் சேதுபதி, இம்முறை சேலையும், சன் க்ளாஸ்ஸூம், விக்கும் வைத்துவிட்டால் போதுமென்று நினைத்துவிட்டார் போல. குழந்தைப் பெற்ற பிறகு எனக்குள்ளே உண்டான மாற்றத்தினால் ஷில்பாக மாறிவிட்டேன் என்று சொல்லும் அந்த கதாபாத்திரம், அப்படி மாறியது உடல்மொழியில் பெரிதாக பிரதிபலிக்கவில்லை.  KINDLY NOTE IT MR. VIJAY SETHUPATHI. ஆனால் ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து வரும் நேரத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு தில் வேண்டும். அதற்காக ஸ்பெஷல் hugs!

காட்சிகள் கொஞ்சம் ’அந்த’ மாதிரி, இந்த மாதிரி இருந்தாலும், அவற்றின் மூலம் இயக்குநர் பகிர்ந்து கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் யதார்த்தம். குறிப்பாக சமந்தா மற்றும் பஹத் ஃபாஸில் இடையேயான வசனங்கள் இந்த தலைமுறையின் பெரும்பாலோனோரின் பிரச்னைகளை அலசுகிறது.

      ’வயிறு பசிக்குது’ என பஹத் சொல்லும் காட்சியில்…. சாப்பாடு வாங்க நானும் வர்றேன்.. இதுகூட தனியா இருக்க முடியாது’’ என கட்டிலில் படுத்த நண்பனின் பிணத்தைக் காட்டி சொல்லும் போது, ’’என்னது இது கூடவா..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இது கூட என்ன பண்ணிட்டு இருந்தன்னு’ என பஹத் சொல்வது திரையரங்கில் கைத்தட்டல்களை அள்ளுகிறது.

’இவ்வளவு நாளா கூட இருக்கேன். எனக்கு என்ன பிடிக்காது  பிடிக்கும்னு தெரியல. ஆனா போன் பாஸ்வேர்டை மட்டும் கரெக்க்ட்டா கண்டுப்பிடிச்சிடுறா’

’’இந்த உலகத்துல எவனுக்காவது இப்பது ஆகுமாடா. என் வீட்டுக்காரியை, என் பொண்டாட்டியை என் பெட்ரூம்ல எல்லாத்தையும் முடிச்சிட்டு, என் கூடவே கார்ல சுத்திகிட்டு இருக்கியே.. பெரிய மெளனராகம் கார்த்திக்குன்னு நினைப்பு’’

’ஏண்டா இப்படி பண்றீங்க. ஏதோ தோணுச்சி லவ் பண்ணினேன். அதான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல. விட்டுட்டு போக வேண்டியதுதானே. உனக்கு எப்படிடா இருக்கும்… நீ தீடீர்னு ஒரு நாள் வீட்டுக்கு வரும்போது நான் உன் பொண்டாட்டி கூட நான் இப்படி பண்ணினேன்னு தெரிஞ்சா….உனக்கு பிடிக்காத பொண்டாட்டியா இருந்தாலும் கூட வெறுப்ப இல்ல. நான் உன்கிட்ட சொன்னது எல்லாம் அவளுக்கு தெரிய வேண்டாம்ன்ப்  ’ என பஹத் பிணத்துடன் பேசும் காட்சி இன்றைய ‘மாற்றுக் காதல்’களின் [அதான் கள்ளக் காதல்கள்னு சொல்வாங்களே] நிஜம்.

’நம்ம அக்கெளண்ட்ல காசு இல்லன்னா இருநூத்தி அம்பது ரூபா பிடிக்கிறாங்கல்ல. அப்படீன்னா ஏடிஎம்ல் காசு இல்லன்னா அவங்க நமக்கு நூத்தி அம்பது ரூபா கொடுக்கணும்ல’ என பஹத் கேட்பது செம லாஜிக்..

’டெட்பாடின்னு யோசிச்சப்ப டென்ஷனாதான் இருந்துச்சு. கூடவே இருந்தேன்ல இப்ப செட் ஆகிடுச்சு.எதுவுமே கொஞ்ச நேரம்தானே.’ என பஹத் சொல்லும்போது, ’எவ்வளவோ நாள் ஒண்ணா இருந்தோம்..அப்ப ஏன் நமக்கு செட் ஆகல.’ என சமந்தா கேட்பது இன்றைய தலைமுறையினரை  தம்பதியினருக்கு இடையேயான பரஸ்பர புரிதல் குறித்து யோசிக்க வைக்கும் விஷயம்.

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பக்ஸ் விஜய் சேதுபதியை முட்டிப் போட்டு நிற்க சொல்லும் போது, ’கொடுக்குற நானே தயங்கல்லையே  வாங்குற நீ தயங்கலாமா’ என்று கேட்பது ஆபாசத்தின் உச்சக்கட்டம்.

ரம்யா  கிருஷ்ணனின் மகனுக்கு சிகிச்சையளிக்க டாக்டரிடம் அவர் கெஞ்சும் போது,ம் மிஷ்கின் நீ மனுஷன்கிட்ட கெஞ்சுற. நான் ஆண்டவன்கிட்ட கெஞ்சுறேன். நீ உன் புள்ளைக்காக மட்டும் கெஞ்சுற, நான் யாருக்காகவும் கெஞ்சுவேன். என் ஆண்டவர் இருக்கார் என்று சொல்லும்போது ’உன் சாமியைப்பத்தி பிரச்சாரம் பண்ற இடமா இது…என கதறும் காட்சி மூடநம்பிக்கைகளுக்கு வைக்கும் சூடு.

விஜய் சேதுபதியை குட்டிப்பையன் தன்னுடைய பள்ளிக்கூடத்திற்கு அழைத்துப் போகும், அங்கிருக்கும் பாட்டி ‘இப்படி தினமும் எத்தனை பேரு கூட  சண்டைப் போட்டுக்குனே இருப்ப..அந்த மாதிரி வாழ்ந்தா அந்த புள்ள வாழ்க்கை நல்லா இருக்குமா… என்று சொல்லும் போது விஜய்சேதுபதி பதிலுக்கு, ‘அப்படி என்ன ஆயா பண்ணிட்டேன், நகம் வெட்டிக்கிறது இல்லயா..முடி வெட்டிக்கிறது இல்லையா…அப்படி பிரச்னை வந்தப்ப உடம்ப மாத்திக்கிட்டேன்…அதுல என்ன தப்பு இருக்கு. உடனே அந்த பாட்டி, ‘நீ சொல்றது எல்லாம் நியாயம்தான். ஆனா உன்ன வெளியே போக சொல்லிட்டாங்க பாத்தீயா…அதான் நியாயம் வேற..நடைமுறை வேற…’ என்பது சுடும் யதார்த்தம். இப்படி படத்தில் வசனம் ‘நச்’ வகையறா.

வித்தியாசமான முயற்சிக்காக, உளவியல்ரீதியாக காட்சிகளை கையாண்டிருக்கும் விதத்திற்காக, மேக்கிங்கிற்காக இயக்குநர் நம் கவனத்தை ஈர்க்கிறார்.

படத்தின் பின்னணி நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய யுவனின் ’டச்’ ‘நச்’.

அடுத்து ஒளிப்பதிவு. பி.எஸ். வினோத் மற்றும் நீரவ் ஷா இருவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இயக்குநரின் Mise-en-scène முயற்சிக்கு கைக்கொடுத்திருப்பது கூடுதல் பலம்.

கலை இயக்குநர் விஜய் ஆதிநாதனின் உழைப்பு ஃப்ரேம்களில் தெரிகிறது.

இப்படத்தின் கதையின் களம் அல்ல என்றாலும் அடிப்படையில் ‘காதலும், காமமும்’ இழையோடுகிறது. ]மேக்கிங் சூப்பராமே என குடும்பத்தோடு செல்லும் சினிமா ப்ரியர்களுக்கு, ’அப்பட்டமான வசனங்கள்’ இன்ஸ்டண்ட் இனிமா. மிஷ்கின் காட்சிகள் ரசனையின் அளவு மீறி போகும் போது இழுவையாகி விடுகிறது. சில காட்சிகள் டீடெய்லிங் சமாச்சாரத்தைப் பதிவு செய்வதற்காக இழுத்துக்கொண்டே போவது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. லாஜிக் இல்லாத ஏலியன் ஃபேன்டசி காட்சிகள் சட்டென்று திரைக்கதையை பைபாஸில் இருந்து சர்வீஸ் ரோட்க்கு அழைத்து செல்கிறது.

ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா, தமிழ் சினிமாவில்  டபுள் ’ராஜ’ இயக்குநராக ஜொலிக்கிறார். 

 ‘சூப்பர் டீலக்ஸ் – A classical non-family deluxe