India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

கனா

கனா

இரா. ரவிஷங்கர்

விவசாயம், கிரிக்கெட் இரண்டையும் உயிராக நினைக்கும் ஒரு டெல்டா விவசாயின் வாழ்க்கையில் விவசாயம் பொய்த்து போக, வாழ்க்கை நொடித்துப் போக, மிச்சமிருக்கும் கிரிக்கெட்டின் மூலம்  அப்பாவின்  ஆசையை நிறைவேற்றும் மகளின் அசத்தல் ஆட்டம் ‘கனா’.

விளையாட்டைப்பற்றிய படங்கள் அவ்வப்போது வந்தாலும், அதில் போட்டி இருக்கும், காதல் இருக்கும். இல்லையென்றால் குடும்ப பகை இருக்கும். ஆனால் ‘கனா’வில் நம்முடைய பாரம்பரிய விவசாயமும், விவசாயியும் இருக்கிறார்கள் கூடவே அவர்களின் வலியையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் இப்படியொரு படத்தை தயாரித்து இருப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹேண்ட் ஷேக். இயக்குநர் அருண்ராஜா காமராஜூக்கு பாராட்டுக்கள்.

தந்தையின் இறுதிச்சடங்கிலும் கிரிக்கெட்டை பார்த்து ரசிக்கும், இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடையும் தருணத்தில் கண்ணீர் விடும் தீவிர கிரிக்கெட் ரசிகர் மற்றும் விவசாயியாக சத்யராஜ். அவரைப் பார்த்ததும் உருகிப்போகும் மனைவியாக, பெண் பிள்ளை இப்படிதான் இருக்கவேண்டுமென வாரியலைச் சுழற்றும் வழக்கமான பாசக்கார அம்மாவாக ரமா. குத்தலாக பேசினாலும், யதார்த்தமான நண்பராக இளவரசு. காதலுக்கு கொடிப்பிடிக்கும் நல்ல பையனாக தர்ஷன். காமெடிக்கு காவலாக முனீஷ்காந்த் மற்றும் தர்ஷன் கூட்டாளிகள் இருவர். க்ளைமாக்ஸூக்கான கமர்ஷியல் கதாபாத்திரமாக சிவகார்த்திகேயன் இவர்களோடு  கதையின் நாயகியாக நடிப்பில் ‘விமன் ஆஃப் த ஷோ’வாக வெளுத்துக் கட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்கள்தான் கனாவின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஊருக்குள் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டி, அதன் நடுவே ஆரம்பிக்கும் ரகளை, அதன் தொடர்ச்சியாக போலீஸ் விசாரணையில்,  நடந்த பஞ்சாயத்தைப் பற்றி இருவர் விவரிக்க கதை ஆரம்பிக்கிறது. ஃப்ளாஷ்பேக் முடிகையில் கதையின் களம் ஜிவ்வென்று கிரிக்கெட்டுக்குள் நுழைகிறது.

  பள்ளிச்சீருடையில், இளம் வயது ஐஸ்வர்யா ராஜேஷ் ஆக நடித்திருக்கும் அந்த கருப்பழகி யார்? புரொபஷனல் நட்சத்திரங்களை விட இந்த கருப்பழகி போன்ற யதார்த்த திடீர் நட்சத்திரங்கள் சமீப காலமாக தமிழ்சினிமாவை அலங்கரிப்பது வரவேற்புக்குரியது.

அருமையான முகப்பாவங்கள். வழக்கமாக இருக்கிறதா இல்லையா எனத்தெரியாத உடைகளில் நரம்பை சில்லிட வைக்கும் பனிமலையில் ஆடிப்பாடும் கமர்ஷியல் கதாநாயகிகளுக்கு மத்தியில்….. அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது நடிப்பினால் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். உங்கள் ஆக்டிங் இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்! வியர்வை வழிய, விரல் மடக்கி பந்துவீசும் போது, ஒரு கிரிக்கெட் வீராங்கனைக்கான அதே உடல்மொழி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை நிச்சயம் கதைக்குள் ஈர்க்கும். சத்யராஜ் இதுவரை வில்லனாக, ஹீரோவாக நடித்தது எல்லாமே தில்லாலங்கடிதான். ஆனால் சமீபகாலமாக வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ்…. அசத்தல். அம்மா ரமா…

அறிமுக இயக்குநராக களமிறங்கி இருக்கும் அருண்ராஜா காமராஜ் முடிந்தவரை ஒவ்வொரு காட்சிகளிலும், அதிகப்பட்ச ஷாட்களை பயன்படுத்தி இருக்கிறார். கதை கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழையும் வரை இரண்டு வீடு, ஒரு மைதானத்தை வைத்தே கதையை நகர்த்தியவர், பிறகு கிரிக்கெட் க்ரவுண்ட்டிற்குள் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். ஒரு விளையாட்டை அதன் யதார்த்தம் கெடாமல் படம்பிடிப்பதில் அதிகம் மெனக்கெட்டு இருக்கிறார்கள்.  இப்படத்தின் பின்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.  கனாவின் கடைசி 20 நிமிடங்களில்  தினேஷ் கிருஷ்ணனின் ராஜ்ஜியம்தான்.

படத்திற்கு பின்னணி இசை கச்சிதம். திபு நைநன் தாமஸின் அந்த ‘வாயாடி பெத்த புள்ள’ வசீகரிக்கிறது.

சத்யராஜின் வீட்டை கடனுக்காக ஜப்தி செய்து விட்ட அதே நேரத்தில் நடைப்பெறும் கிரிக்கெட் போட்டியில், ஐஸ்வர்யா ராஜேஷின் ஆட்டத்தைப் பார்த்து அப்பா கண்ண்ணீர் விட்டு சந்தோஷப்படும் காட்சியில், அம்மா ரமா மகளின் விளையாட்டைப் பார்க்காமல், கண்ணீரில் உற்சாகமாகும் தன் கணவரையே பார்த்துகொண்டிருக்கும் காட்சி மிக அழகான ’காட்சி ஹைக்கூ’.

அரையிறுதிப்போட்டியில் இரு அணிக்கும் இடையில் யார் வெற்றி என்பதை தீர்மானிக்கும் சூப்பர் ஒவரின் போது, பயிற்சியாளராக சிவகார்த்திகேயன், ‘’தோல்வியோட வலி என்னன்னு இந்த ஒரு நிமிஷத்துல புரிஞ்சிருப்பீங்க. இதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்ல’’ என்று சொல்கிற வசனத்தில் இருக்கிற அழுத்தம் யதார்த்தம். ‘விளையாட்ட சீரியஸா எடுத்துகுற இந்தியா, விவசாயத்த விளையாட்டா கூட எடுத்துகுறது இல்ல’ என்பது போல் படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் விவசாயம் பத்தின கருத்துகள், ஐஸ்வர்யா ராஜேஷின் க்ளைமாக்ஸ் பேச்சு என விவசாயிகளின் இன்றைய சூழலை, ’ஊருக்கே சோறுப் போடுறவங்களுக்கு இப்ப சாப்பிட சோறு இல்ல’ என்கிற வலியை உணர்த்துகிறது.

நல்ல கதைதான்..ஆனால் பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயன் ஒரு மேட்சில் பட்டையைக் கிளப்பினார். அதன்பிறகு சூழ்நிலையால் அவரால் இந்திய அணியில் இடம்பெறமுடியவில்லை என்று கொடுக்கப்படும் கமர்ஷியல் பில்டப்பிற்கு ஏற்றபடி அவர் அணியில் எந்தவொரு மேஜிக்கையும் உருவாக்கவில்லை என்பதால் அவரது கதாபாத்திரம் அந்தளவுக்கு ஈர்க்கவில்லை. அதேபோல்,   வழக்கமாக படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு இழுந்து வந்து உட்கார வைத்த நகம் கடிக்க வைக்கும் அம்சத்தில் என்றைக்குமே இறுதிப்போட்டிக்கு சைக்காலஜிக்கலாகவே அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியுடன் படம் முடிகிறது. இந்திய அணிக்காக விளையாடி ஜெயித்தால் போதுமென்ற அந்த ஒரே லைனுக்கு அரையிறுதிப் போட்டியே போதும்..இறுதிப் போட்டி வேண்டாமென்றும் முடிவு கட்டிவிட்டார்கள் போல. 

கனா – சிக்ஸர்!