March 2020 Edition
We Magazine Logo

India's first and only magazine to get into India Book Of Records and Asia Book Of Records

வடசென்னை – திரை விமர்சனம்.

August 17, 2018 | 13:30 IST | Movie Reviews |

வடசென்னை – திரை விமர்சனம்.

-இரா. ரவிஷங்கர்

ஒரு குப்பத்து கேரம் போர்ட் வீரன், எப்படி அந்த குப்பத்தைக் காக்கும் எல்லைவீரன் ஆகிறான் என்பதே ‘வடசென்னை’.

ஒன்லைன் என்னவோ சாதாரணமாக இருந்தாலும், சென்னை பூர்வீக குடிமக்களின் மொழி, காதல், நட்பு, துரோகம், அரசியல், வாழ்க்கை என அனைத்தையும் கலந்த ஒரு கேங்ஸ்டர் ஃப்லிம்மாக கொடுத்திருப்பதில் இயக்குநர் ‘வெற்றி’ மாறன் நம் கவனத்தை ஈர்க்கிறார்.

ஒரு கொலை. நான்கு துரோகிகள்…  என ஆரம்பிக்கும் போதே திரைக்கதை சூடுப்பிடிக்க,  இந்த கொலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் என  வாய்ஸ் ஓவரில் ஒலிக்க, அப்பாவியாக தனுஷ் சிறைக்குள் நுழைய, ஜிவ்வென்று எகிறுகிறது  வடசென்னை. முதல் பாதி வரை இப்படியே தடதடக்கிறது.

வெவ்வேறு காலக்கட்டங்கள், கதை நாயகனுடன் சில கதாபாத்திரங்கள், சில சம்பவங்கள், சில காரணங்கள் என கதையின் போக்கு முன்னோக்கியும் பின்னோக்கியும் விறுவிறுப்பாக பயணிக்கும் திரைக்கதை, தமிழ்சினிமாவுக்கு கொஞ்சம் புதிது. படத்துடன் நம்மை ஒன்றிப் போக வைப்பது வெற்றிமாறனின் தனித்துவ ஆளுமைத்திறனான ‘டீடெய்லிங்’ ஸ்டைல். வடசென்னை ஆகட்டும், சிறைச்சாலை ஆகட்டும் மனிதர் டீடெய்லில் டீப்பாக டீல் செய்திருக்கிறார்.

அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் பவன், நவகீதன், கூடவே தனுஷ்… இப்படி பட்டியலிடுவதில் தவறு இல்லை. வெற்றி மாறன் உலுக்கெடுத்தாரோ இல்லையோ ஆனால் அனைவரும் நடிப்பில் வெளுத்தெடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல் கேங்ஸ்டராக தனுஷ்.. நடிப்பில் ’வேலைக்காரன்’ என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

அமீரின் காட்சிகள் அருமை. போலீஸ் அதிகாரியான வின்சென்ட் அசோகனை பந்தாடும் காட்சியில் அமீர் பளீர். தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் காட்சிகள் ரத்தப் பொரியலுக்கு நடுவே கிடைக்கும் ’ஹாட் அண்ட் சோர் ஸ்வீட் வெஜ் சூப்’. கணவனைக் கொன்றவர்களைக் கொல்ல முந்தானை விரித்த அசல் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ஆண்ட்ரியா. சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் கூட பயன்படுத்தி இருப்பது இயக்குநரின் பலம்.

படத்திற்கு வலுசேர்க்கும் இதர இத்யாதிகள் ஒளியும், ஒலியும். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தனுஷுக்கும் ஆற்றும் உதவி. ’ரா ஃப்லிம்’ வகைக்குள் அடங்கும் வகையில் காட்சிகளை அதற்கேற்ற வண்ணத்தில் படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் பரபரப்பை பற்ற வைக்கிறார். ஓவ்வொரு அசால்ட்டுக்கும் கானா பாடல்களில் வடசென்னையின் அடையாளத்தை காதில் ஒலிக்க வைத்திருக்கிறார்.

கதையின் ஆரம்பத்தில் நிகழும் கொலையை படத்தின் ‘Chekhov’s Gun‘ ஆக  இயக்குநர் கையாண்டு இருப்பதில் நேர்த்தி! தனுஷின் குப்பத்திற்குள் நுழைந்து செல்ல அனைவரும் பயன்படுத்தும் காம்பவுண்ட் சுவர் ஓட்டைக்குப் பின்னால் ஒரு சம்பவத்தையும் வைத்திருப்பது டைரக்டர்ஸ் டச்!

’’திரும்பி வர ஊர் இருக்குங்கற நம்பிக்கையிலதானே எங்க வேணாம்னாலும் போறோம். அந்த ஊரே இல்லன்னா…?”’ என தனுஷ் வெடிப்பதைப் போல, படத்தில் ஆங்காங்கே ‘நச்’ வசனங்கள். முன்னேற்றம் என்பது, வேறு யாரோ பலனடைய உள்ளூர் மக்களையும், அவர்கள் வாழ்வாதாரத்தையும் அப்புறப்படுத்துவதுதான் என்ற யதார்த்தத்தையும் போகிற போக்கில் திரைக்கதையோடு இழையவிட்டிருக்கிறார்.

ஒரு பக்கம் ’பெர்ஃபெக்ட்டாக படமெடுத்திருக்கும்’ வெற்றிமாறன், மற்றொரு பக்கம் ’வடசென்னை’ மண்ணின் மைந்தர்களை ’டைரக்ட்டாக அசால்ட்’ பண்ணியிருக்கிறார். திருநெல்வேலியில் இருக்கிறவர்கள் எல்லோரும் அருவாளுடன்தான் சுற்றுவார்கள், மதுரையில் இருக்கிறவர்கள் அனைவரும் சண்டியராகதான் திரிவார்கள் என்பது போன்ற மாயப்பிம்பங்களை திரைப்படங்கள் உருவாக்கியிருப்பதைப் போல, வடசென்னை மக்கள் அனைவரும் ‘சம்பவம்’ பண்ணவும் ஊக்கடிக்கவும்தான் துடிக்கிறார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார். இயக்குநர்கள் இதுபோன்ற அம்சங்களை கையாளும்போது, கொஞ்சம் யோசிப்பது அனைவருக்கும் நல்லது.

பெரிய குங்குமப்பொட்டுடன் வலம்வரும் வயதான கதாபாத்திரம் யார்…எதற்காக அப்பெண்மணி குறிசொல்வது போல பேசுகிறார்.. என்பது புரியவில்லை. அவருக்கு கொடுத்திருக்கும் க்ளோஸ் அப் ஷாட்களினால் நம்மை அப்படி கேட்க தூண்டுகிறார். இடைச்செருகலான கதாபாத்திரமா இல்லை எடிட்டிங்கில் அப்பெண்மணியின் காட்சிகளுக்கு கத்திரி விழுந்ததா…?

இயல்பாக போகும் ரவுடிகள் கதையில், சமூகப்பிரச்னையைக் காரணம் காட்டி, திடீர் ஞானம் பெற்று அடாவடியாக கதாநாயகன் ஆவது, அசல் கமர்ஷியல் கலாட்டா.  இரண்டாம் பாகத்திற்கான டெண்டர் விட்டது போல இருக்கிறது.

தமிழில்  ஒரு நேர்த்தியான கேங்ஸ்டர் ஃபிலிம்மை கொடுத்தமைக்கான வடசென்னையின் ரத்த வாடையை மறந்துவிட்டு, வெற்றி மாறனுக்கும், தனுஷூக்கும் கைக்கொடுக்கலாம்.